UNBREAKABLE – 2000

💘🎥🎥🎥🎥🎥🎥🎥🎥 UNBREAKABLE – 2000 மனோஜ் ஷ்யாமளன் . ஹாலிவுட்டில் பெருமை நாட்டிய இந்தியர் . மலையாளி தந்தைக்கும் தமிழ் அன்னைக்கும் பிறந்தவர் . நோலனைப்போல சிறுவயதிலேயே சினிமா தான் வேண்டும் என்று அடம்பிடித்து 8 MM கேமராவைத்தூக்கிக்கொண்டு படம் பிடித்தவர் . இவரின் படங்களை உற்றுநோக்கினால் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பைத்தான் அதிகமாய் காட்சிப்படுத்தியிருப்பார் . குடும்ப உறவைத்தான் பெரும்பாலும் படம்பிடித்திருப்பார். ப்ரூஸ் வில்லிசை வைத்து எடுத்த THE SIXTH SENSE படத்தின்மூலம் வில்லிசை வேறொரு லெவலுக்கு அழைத்துச்சென்றார். தான் வாழ்ந்த ஊர்களிலேயே பெரும்பாலும் ஷூட்டிங்கை வைத்துக்கொண்டார். இவரின் படங்களில் எல்லாம் கண்டிப்பாய் ஒரு மெகா ட்விஸ்ட் இருக்கும் . பெரும்பாலும் அது திருப்திப்படுத்தும் விதமாக இருக்கும். இவரின் படங்களிலேயே அதிக பேருக்கு பிடித்தபடம் என்றால் அது THE VILLAGE தான். பொறுமையாக நகர்ந்தாலும் பீரியட் படம்போல இருந்தாலும் புதிய அனுபவத்தை ஆடியன்ஸுக்கு தந்தது ... இன்று பாக்ஸ் ஆபிஸில் நம்பர்.1 ல் இருக்கும் அவதார் படத்தின் டைட்டிலை ஏற்கனவே வைத்திருந்தவர் இவர்தான் . இவருடைய THE LAST AIRBINDER எனும் திரைப்படத்திற்கு முதலில் அவதார் எனும் டைட்டில்தான் சூட்டப்பட்டிருந்தது . பின் கேமரூனின் வேண்டுகோளுக்கு இசைந்து டைட்டிலை விட்டுக்கொடுத்தார் . இவரின் படங்களில் பிட்டுக்காட்சிகள் என்பது துளிகூட இருக்காது . குடும்பத்துடன் உட்கார்ந்து தாராளமாய் பார்க்கும் வண்ணம்தான் படமெடுப்பார் . குடும்ப உறவுகள் , நடுவே ஒருவித படபடப்புடன் நகரும் திரைக்கதை , கடைசியில் ஒரு அட்டகாசமான ட்விஸ்ட் , இதுதான் இவரின் பார்முலா . SIXTH SENSE ஆஸ்காரில் மொத்தம் 6 துறைகளுக்கான விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது . பத்மஶ்ரீ விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியபோதுகூட சில சர்ச்சைகள் ஏற்பட்டன . எப்படி இருப்பினும் , ஒரு இந்தியர் உலகளவில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஹாலிவுட்டில் முத்திரை பதித்திருப்பது நமக்கெல்லாம் பெருமையான விஷயம்தானே... SIXTH SENSE-ன் இமாலய வெற்றிக்குப்பின் ஷியாமளன் மீண்டும் ப்ரூஸ் வில்லிஸ் மற்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் உடன் இணைந்து எடுத்த இரண்டாவது படம்தான் UNBREAKABLE . அப்படியானால் இப்படத்திற்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்திருக்கவேண்டும் ? ஆனால் அதை முடிந்தவரை பூர்த்தி செய்திருந்தார். படத்தின் கதை ... எலைஜா (சாமுவேல் ஜாக்சன்) என்பவன் எலும்பு வளர்ச்சி மரபு குறைபாட்டோடு (ஆஸ்டியோஜெனிசிஸ் இம்பெர்பக்ட்டா) பிறக்கிறான் . எங்காவது கீழே விழுந்தால் நமக்கெல்லாம் கையில் சிராய்ப்பு , காயம் போன்றவை ஏற்படும் . பலமாக மோதினால் எலும்பு உடைந்து புத்தூருக்குப்பறப்போம் . ஆனால் எலைஜாவுக்கு அப்படியில்லை . அவன் தடுக்கிவிழுந்தால் கூட உடலில் பாதி எலும்புகள் நொறுங்கிவிடும் . அவனுக்கு சிறுவயதுமுதலே காமிக்ஸ் மேல் கொள்ளைப்பிரியம் . அதில் வரும் சூப்பர்ஹீரோக்கள் நிஜத்திலும் இருக்கிறார்கள் ,ஆனால் அவர்களின் திறமையை அவர்களே உணராமல் இருக்கிறார்கள் என்பது அவன் கருத்து . இந்நிலையில் டேவிட் என்பவனைப்பற்றி தெரிந்து கொள்ளும் எலைஜா , அவனை சந்திக்கிறான் . டேவிட் ஏற்கனவே ஒரு ரயில் விபத்திலிருந்து தப்பியவன் . அவனிடம் எலைஜா , ‘நீ ஒரு சூப்பர்ஹீரோ’ என்று கூற , அதை மறுக்கிறான் டேவிட் . சில நாட்களில் டேவிட்டுக்கு வித்தியாசமான அனுபவங்கள் ஏற்படுகிறது . இன்னொருபுறம் கடைசிவரை நீ சூப்பர்ஹீரோ என்று கூறிக்கொண்டே இருக்கும் எலைஜா கூறியதுபோல் டேவிட் ஒரு சூப்பர்ஹீரோ தானா ? என்பதே படத்தின் கதை . ப்ரூஸ் வில்லிஸ் , வழக்கம்போல ஒரு அமைதியான குடும்பத்தலைவராகவும் எந்நேரம் பார்த்தாலும் குழப்பத்தில் திரிவது என அருமையாக நடித்திருக்கிறார் . ரயிலில் பயணிக்கும்போது அவருடன் ஒரு பெண் அமர்ந்ததும் உடனே தன் கையில் இருக்கும் திருமணமோதிரத்தை கழட்டிவைத்துவிட்டு அவளிடம் கடலைப்போடுவதும் , அவளிடம் பின் பல்பு வாங்கும்போதும் ஒரு அசடு வழிவார் பாருங்கள் , நச்சென்று இருக்கும் . சாமுவேல் ஜாக்சன் , மனம் முழுதும் தன்னிடம் இருக்கும் பிரச்சனையை நினைத்து ஒரு வெறுமையான பார்வையைக்காட்டும்போதும் சரி , நீ தான் சூப்பர்ஹீரோ என்று ப்ரூஸிடம் சொல்லும்போது அவரின் முழுநம்பிக்கையையும் கண்களின்வழியே கடத்தும்போதும் சரி, மனிதர் சும்மா கிழி கிழி கிழி தான் . ஒளிப்பதிவாளரும் அருமையாக தன் பணியினைச்செய்திருப்பார் . இசை , ஜேம்ஸ் நியுட்டன் ஹோவர்ட் . எப்படி முந்தைய ஷ்யாமளன் படத்தில் தன் பணியினைச்செய்திருப்பாரோ , அதைவிட தன்னுடைய பெஸ்ட்டை இப்படத்தில் கொடுத்திருக்கிறார் . மொத்தத்தில் , ஒரு அமைதியான , அழகான அதேநேரம் குடும்பத்துடன் ஒரு அட்டகாசமான திரில்லரை பார்க்கலாம். கண்டிப்பாய் இப்படம் ஏமாற்றாது . மனோஜ் ஷ்யாமளனின் முதல்படம் PRAYING WITH ANGER என்பது தவறு . அந்த படம் விளையாட்டாய் அவர் எடுத்தது . அதன்பின் வந்த WIDE AWAKE கூட திரையரங்குகளில் முதலில் ரிலிசாகவில்லை . SIXTH SENSE –ன் வெற்றிக்குப்பின் ரிலிசாகி ஓரளவு சுமாராக ஓடியபடம் தான் WIDE AWAKE . அதனால் OFFICIAL ஆக உலகம் முழுக்க ரிலிசான முதல்படம் SIXTH SENSE தான் ... மேலும் இவரின் ஒவ்வொரு படத்திலும் கௌதம்மேனன் போல ஏதாவது ஒரு குட்டி ரோல் செய்திருப்பார் . இத்திரைப்படத்தில் ஒரு போதைப்பொருள் விற்பவனாக ஒரு காட்சியில் வருவார்... நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ வில் இப்படத்தை காணலாம் ...https://youtu.be/R_f1uCWKZQs

Comments