ஹைக்கூ முற்றம்’ மின்னிதழ் வெளியீட்டு விழா
ஹைக்கூ முற்றம்’ மின்னிதழ் வெளியீட்டு விழா
ஹைக்கூ கவிஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்
சென்னை. நவம்.11.
கடந்த சனிக்கிழமையன்று மாலை சென்னை கோயம்பேடு எதிரேயுள்ள
விக்டோரியா கார்டன்ஸின் ஏழாவது தளத்தில் ‘ஹைக்கூ முற்றம்’ ஐந்தாவது
நிகழ்வு இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு முனைவர் இரா.பாஸ்கரன் தலைமையேற்றார். அமைப்பாளர்
கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.
இதுவரை நடைபெற்ற ‘ஹைக்கூ முற்றம்’ நான்கு நிகழ்வுகளின் தொகுப்பாக
‘ஹைக்கூ முற்றம்’ மின்னிதழ் வெளியிடப்பட்டது. இதனைக் கவிஞர் மு.முருகேஷ்
வெளியிட, தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர்
கவிஞர் தமிழமுதன் பெற்றுக்கொண்டு, வாழ்த்துரை வழங்கினார்.
கவிஞர் சா.கா.பாரதி ராஜா எழுதிய ‘பென்சில் பூக்கள்’ ஹைக்கூ நூலைத்
திறனாய்வு செய்து கவிஞர் புதுகை ஆதீரா உரையாற்றினார். ‘ஹைக்கூவும்
நானும்...’ எனும் தலைப்பில் கவிஞர் சா.கா.பாரதி ராஜா பேசுகையில், “சிறுவயது
முதலே கவிதை நூல்களை வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த நான்,
தொடக்கத்தில் சிறுசிறு புதுக்கவிதைகளை எழுதினேன். அப்போதுதான்
ஹைக்கூ கவிதை நூல் என் வாசிப்புக்குக் கிடைத்தது. அதைப் படித்துவிட்டு,
எனக்கும் ஹைக்கூ எழுதும் ஆர்வம் வந்தது.
இன்றைய வேகமான அறிவியல் உலகில் எதையும் சுருக்கமாகவும் செறிவாகவும்
சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இக்காலத்திற்கேற்ற சுருக்கமான
வடிவமாக இருப்பதால் பலராலும் ஹைக்கூ கவிதைகள் விரும்பிப்
படிக்கப்படுகின்றன. நான் எழுதிய என் வாழ்வில் பார்த்த அனுபவக் காட்சியொன்றை
ஹைக்கூ கவிதையாக்கி, கவிக்கோ நினைவு ஹைக்கூ போட்டிக்கு அனுப்பினேன்.
அந்தக் கவிதைக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம் கிடைத்தது. அந்தப் பரிசு என்
கவிதையைப் பலரிடத்தும் கொண்டுபோய் சேர்த்தது” என்று குறிப்பிட்டார்.
பின்னர் நடைபெற்ற ‘ஹைக்கூ வாசிப்பரங்கில்’ 20-க்கும் மேற்பட்ட கவிஞர்கள்
ஹைக்கூ கவிதைகளை வாசித்தனர். சிறப்பான கவிதைகளை வாசித்த
கவிஞர்களுக்குப் புத்தகப் பரிசுகள் வழங்கபட்டன.
நிகழ்வில், ஓவியக்கவிஞர் நா.வீரமணி, பேராசிரியர் ஆதிரா முல்லை, வழக்கறிஞர்
க.முத்துராமலிங்கம், எழுத்தாளர் சந்துரு மாணிக்கவாசகம், கவிஞர்கள் கலைச்செல்வி,
அண்ணாமலை, கு.தென்னவன், ரமணி தேவி, வசந்தா சுவாமிநாதன், சாந்தி சரவணன்,
கா.பாபு சசிதரன், வ.ரகுநாத், டெய்சிராணி ,தன.தமிழரசன்,முல்லை.மனோகர்உள்ளிட்ட ஏராளமான கவிஞர்கள்
பங்கேற்றனர்.
இணைப்பு - படக்குறிப்பும் படமும்:
சென்னையில் நடைபெற்ற ‘ஹைக்கூ முற்றம்’ ஐந்தாம் நிகழ்வில் ‘ஹைக்கூ
முற்றம்’ மின்னிதழைக் கவிஞர் மு.முருகேஷ் வெளியிட, கவிஞர் தமிழமுதன்
பெற்றுக்கொண்டார். அருகில் முனைவர் இரா.பாஸ்கரன், கவிஞர் ஆழ்வார்குறிச்சி
ப.சொக்கலிங்கம், கவிஞர் சா.கா.பாரதி ராஜா ஆகியோர் உள்ளனர்.










































































Comments
Post a Comment