BLISS - Turkish 2007

💘🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥💘 BLISS - Turkish 2007 பெண்ணாய் பிறந்ததற்க்கே மாதவம் செய்திடல் வேண்டும் எனக்காலகாலமாக சொல்லி வந்தபடியே ஆர்டிக் முதல் அண்டார்டிகா வரை கொடுமைப்படுத்தப்படும் இனம் பெண்ணினம். ஒவ்வொரு நொடியும் பெண்கள்.... உலகில் ஏதாவது ஒரு மூலையில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அந்த துன்பக்கடலின் ஒரு துளிதான் மரியம். அந்த அனிச்ச மலருக்கு வயது 17. துருக்கி தேசத்து மலைகிராமத்தில் நெடிதுயர்ந்த மலையின் பிரம்மாண்டத்தை பிரதிபலிக்கும்... சலனமில்லாத குளத்தின் கரையில்... துவைத்துப்போட்ட துணி போல் கிடக்கிறாள் மரியம். அந்த இளங்குருத்தின் குருதி தொடை வழியே வழிந்தோடி குளத்து நீரில் கலப்பதை காண முடியும். முதல் காட்சி.... முதல் ஷாட்டிலேயே இத்துன்பத்தை... துயரத்தை சொல்லி விட்டார் இயக்குனர் Abdullah Oguz. நடந்த கொடுமைக்கு நிவாரணம் தேடாமல் பாதிக்கப்பட்ட பெண்ணை மேலும் ரணமாக்குவதானே நமது குல வழக்கம். தாயில்லாத மரியத்துக்கு பேயாக சித்தி. கற்பழிக்கப்பட்ட பெண்ணை அழிப்பதுதான்.... எங்குமே சாத்திரம்... சம்பிரதாயம். “தூக்குலதொங்கு”என கயிரை பரிசளிக்கிறாள் சித்தி. உடலும்,மனமும் ரணமாகிப்போன மரியத்துக்கு ஆதரவு ஒரே ஒரு பாட்டி மட்டும்தான். அவரிடம் கூட தன்னைக்குலைத்த மாபாதகனை காட்டிக்கொடுக்க மறுக்கிறாள் மரியம். மரியத்தை ஒழிப்பது எப்படி என்று ஊரே ஒன்று கூடி பேசுகிறது. முடிவாக ஒரு ராணுவ வீரனிடம் பணியை ஒப்படைக்கிறார்கள். கொலைக்களனாக இஸ்தான்புல் நகரத்தை தேர்ந்தெடுத்து மரியத்தை பலியாடாக அழைத்துச்செல்கிறான். புண் பட்ட மரியத்தின் மனதுக்கு ஒவியம் போல் காட்சியளிக்கிறது இஸ்தான்புல் நகரம். நகரம் மறைந்திருக்கும் நரகம் என்பதறியா பேதை, ராணுவத்தில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக பணிபுரிந்தவனின் பின்னாள் எந்த சலனமும் இல்லாமல் வருகிறாள். துடிக்கும் துப்பாக்கியால் மரியத்தின் உயிரை குடிக்க முடியாமல் தவிக்கிறான் ராணுவ வீரன். காரணம்.... சிறு வயது முதல் அவனால் நேசிக்கப்பட்டவள் மரியம். தன்னை நேசித்தவன்... யாசிப்பது உயிர்... என்பதறிந்து “எடுக்கவேண்டாம்....கொடுக்கிறேன்” என தற்கொலைக்கு துணிகிறாள். “தூயவனே! செல்... என் தந்தையிடம் சொல்... மரியம் மாசற்றவள்..... சொர்க்கத்தில் என் தாயை சந்திக்க செல்கிறேன்” என மரணத்தை நோக்கி மரியம் பாய்கையில் தடுத்து விடுகிறான் மனிதநேயம் மிகுந்த ராணுவ வீரன். இக்காட்சியை நூறுமுறை பார்க்கலாம்... நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை ... இவை எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு ஒரு காட்சியை எப்படி வீரியமாக்குகின்றன என்பதற்க்கு இலக்கணம் இக்காட்சி. இது போன்ற படங்களை நேசித்து பார்க்கும் படைப்பாளிகளின் கற்பனை திறன்கள் பட்டை தீட்டப்பட்டு புதிய பரிமாணங்களை உருவாக்கும்... வாழ நினைத்தால் வாழலாம்.... வழியா இல்லை பூமியில்.... என புறப்பட்ட ஜோடிக்கு அடைக்கலம் தருகிறார் ஒரு பேராசிரியர். அலை கடலில் ஒரு தோணி... அதில் வாழ்வதே என் பாணி.... என உல்லாசப்படகில் உலகம் சுற்றும் வாலிபன் அவர். அவரது தாடி மட்டும் வெள்ளையில்லை.. மனமும்.. என எண்ணுகிறாள் மரியம். அவர், பாலா....பாலிடாலா....என சந்தேகிக்கிறான் ராணுவவீரன். மரியத்தை கெடுத்த மாபாவி யார்? என்ற முதல் கேள்வியிலிருந்து.... பேராசிரியர் நல்லவரா?கெட்டவரா? மரியத்தை ராணுவவீரன் ஏற்றானா?மறுத்தானா? மரியம் வாழ்வாளா?வீழ்வாளா? என்ற கேள்விகளோடு உணர்வுபூர்வமாக பயணிக்கிறது இப்படம். ஒரு முடிவோடு மரியத்தின் நெற்றியை நோக்கி ராணுவவீரன் பிடித்திருக்கும் துப்பாக்கி வெடிக்குமா?வெடிக்காதா? என்ற உச்ச எதிர்பார்ப்போடு உணர்வுப்பூர்வமாக முடித்திருக்கும் இப்படம் அனைவரும் அவசியம் காண வேண்டிய படம் ... அமேசான் பிரைம் வீடியோவில் இப்படத்தை காணலாம் ... https://youtu.be/XnEMhcaLTuM ›

Comments