THE MIRAGE ( DURANTE LA TORMENTA) - 2018 Spain

💘🎥🎥🎥🎥🎥🎥🎥🎥 THE MIRAGE ( DURANTE LA TORMENTA) - 2018 Spain
இப்படம் உண்மையில் புலப்படாத அறிவியல் புனைவான டைம் டிராவல் தான் என்றாலும் சற்றே மாறுபட்டது . இப்படம் பழைய ராபர்ட் ஸிமேக்கிஸின் BACK TO THE FUTURE படத்தைப் போன்று டைம் ட்ராவல் படமல்ல. ஆனால் காலம் கடத்தல் தொடர்புடைய படம். காலம் கடத்தலை வேறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ORIOL PAULO. இயக்குநரைப் பற்றி ... உலக சினிமாவை ரசிக்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ORIOL PAULO-வை தெரியாமல் இருக்காது. திரில்லர் வகைப் படங்களில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். இன்றும் இவரின் ” THE INVISIBLE GUEST ” , ” THE BODY” , ” JULIA’S EYES” ( எழுத்து மட்டும் ) ஆகிய படங்கள் விறுவிறுப்பான திரைக்கதைக்கு முன்னோடியாக இருக்கின்றன. ஒரு கருவை எடுத்துக் கொண்டு அதில் பலரின் கோணங்களைச் செலுத்தி நேர்மையாக திரைக்கதையை நகர்த்துபவர். இப்படத்திலும் அதைப் பிரபாதமாக நகர்த்தியிருக்கிறார். கதை ஒரு மின்னலை வைத்துப் பயணிக்கிறது. அந்த மின்னல் என்ன செய்கிறது என்பதுதான் படத்தின் முக்கிய அம்சம். காலம் கடத்தலை நிகழ்த்துவது இந்த மின்னல்தான்.இந்த ஒன்றை மட்டும் வைத்து இப்படத்தை FANTASY வகை படமென்று குறிப்பிட முடியாத அளவிற்கு, அவரின் வழக்கமான படங்களைப் போல திரில்லர் வகைப் படமாகத்தான் உருவாக்கியுள்ளார். காட்சி அமைப்பிற்கும் ஏதோ ஒரு காரணத்தை வைத்திருக்கிறார். ஒரு வீட்டில் ஒரு கொலை நடக்கிறது அதனை அதன் பக்கத்து வீட்டிலுள்ள ஒரு பையன் பார்த்துவிடுகிறான். அந்தப் பையன் கொலையின் ஐந்து நிமிடத்திற்கு முன் தன் GUITAR- ல் அவன் வாசிப்பதை ரெகார்ட் செய்து டிவியின் மூலம் காண்கிறான். பெரும் மாற்றத்திற்கு உதவுகிறது அந்த தொலைக்காட்சி . பிறகு கொலைகாரனால் அவனும் இறந்துவிடுகிறான் . அப்பொழுது அங்கு வரும் இடியானது ஒரு மாயம் செய்துவிட்டு கிளம்புகின்றது. இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து அந்த பையன் இருந்த வீட்டிற்கு ஒரு குடும்பம் குடி வருகிறது. அங்கு வந்தவுடனே அங்கிருந்த ஒருவர் மூலம் அந்தப் பையனைப் பற்றியும் அங்கு நடந்த கொலையில் கொலைகாரன் சிறை சென்றிருப்பதையும் அந்தத் தம்பதிகள் அறிந்து கொள்கின்றனர். அந்த வீட்டில் இன்னமும் அந்தப் பையன் பயன்படுத்திய டிவி இருக்கிறது. அதே நாளில் இருபத்தி ஐந்து வருடத்திற்கு முன்பு தான் அவன் இறந்திருக்கிறான் .அன்றிரவு அதேபோல் இடியின் மூலம் இருபத்தி ஐந்து வருடங்கள் அங்கு நடந்ததை மின்னல் அப்படியே அப்பட்டமாக ஒளிபரப்புகிறது. கணவனும் மகளும் தூங்கிக்கொண்டிருக்க மனைவி ( ADRIANA UGARTE ) மட்டும் அதைக் காண்கிறாள். அவனது மரணத்தை அவனிடம் கூறி அவனைக் காப்பாற்றுகிறாள். அவளுக்குள் ஒரு உயிரைக் காப்பாற்றிய நல்லுணர்வு வருகிறது . ஆனால் இங்குதான் PAULO தனது அறிவுக் கூர்மையை நிருபிக்கிறார். அன்று இறந்தவன் இன்று உயிரோடு இருந்தால் காலம் மாறியிருக்கும் அல்லவா ? ஆமாம் முழுவதும் மாறிவிட்டது . விழித்துப் பார்த்தால் கதாநாயகி அவள் வேலை பார்த்த மருத்துவமனையில் சிறந்த மருத்துவராக இருக்கிறாள் .ஆனால் அவள் ஒரு மருத்துவராக பயிற்சி செய்யவேயில்லை. ( காலத்தின் மாற்றம் இது.) உதவியாளராகத்தான் வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் குடும்பத்தைத் தேடுகிறாள். குழந்தையின் பள்ளியில் அப்படி ஒரு குழந்தையே இல்லை.யாரும் இவள் சொல்வதை நம்பத் தயாராக இல்லை. இறந்த காலத்து பையனைக் காப்பாற்றியதால் காலம் மாறியிருக்கிறது என்றால் யார்தான் காது கொடுத்துக் கேட்பார்கள்? அவள் கணவனும் நீ யாரென்று கேட்கிறான். பிள்ளையையும் அவனுக்குத் தெரியவில்லை. அப்படியென்றால் அந்தப் பையனைக் கொன்றால் காலம் மாறுமல்லவா? அதனால், அவனை தேடி கண்டுபிடித்து தன் குடும்பத்தை மீட்க போராடுவதே மீதிக்கதை. கதாநாயகியின் வேதனை ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அதைவிட இரண்டு மடங்கு வேதனையை அந்தப் பையனுடைய வாழ்வு கொண்டிருக்கிறது. தன் உயிரைக் காப்பாற்றியது எதிர்காலத்தின் பெண் என்பதை தன் தாயிடமும் நண்பனிடமும் கூறுகிறான். ஆனால் யாரும் நம்பவில்லை.அவனின் வேதனை யாருக்கும் புரியவில்லை. அவளைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆசையையும் அவள் மீதான அன்பையும் யாரும் உணரவில்லை. அதைவிடக் கொடிய விஷயமென்றால் அந்தக் கொலைகாரன் இந்த காலத்தில் சிறை செல்லவில்லை. அவன் அவளைப் பார்த்தானா? கொலையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டானா? அவளால் மீண்டும் அழியப் போகிறானா? நம் மனதில் குழப்பத்தை மூழ்கவிட்டு PAULO சிறப்பாக திரைக்கதையை நகர்த்துகிறார். THE MACHINIST ( 2004) படத்திற்கு பெரும் புகழ் கண்ட XAVI GIMENEZ தான் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவரே PAULO வின் முந்தைய படமான ( THE INVISIBLE GUEST ) படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருந்தார். ரொமான்ஸ் காட்சிகள், உணர்வு பூர்வமான காட்சிகள் என எல்லாவற்றிலும் சிறப்பான ஒளிப்பதிவை வெளிப்படுத்தியிருக்கிறார் XAVI. குறிப்பாக மேல் மாடியிலிருந்து ஒரு கதாபாத்திரம் கீழே விழும்படியான காட்சியை ஸ்லோவ் மோஷன் ஷாட் மூலம் மனக்கிளர்ச்சியை ஒரே இடத்தில் மையப் படுத்துகிறார். சில முக்கிய காட்சிகள் இருளிலே வருவதைக் கூட அழகாக கையாண்டிருக்கிறார். கதாநாயகி ஒரு ஆண் காவலரிடம் பேசும் ஒரு இரவுக் காட்சியில் அங்கே இருக்கும் டிஸ்கோ லைட்களும் காவல் வண்டியின் லைட்களும் மின்னுகிற காட்சி அற்புதம். மின்னல் காட்சிகளும் இரவுக் காட்சிகளும் படத்திற்கு பெரிய பலம். ADRIANA UGARTE – வின் நடிப்பு மிக இயல்பாக கதையோடு மிதந்து கொண்டேயிருக்கிறது. ஒரு பிடியில் மாட்டிக் கொண்டு படும் தவிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தொகுப்பில் சஸ்பென்ஸ் அவிழும் காட்சியைச் சொல்லலாம். FLASHBACK போன்று வரும் அந்தப் பகுதி ஒரு நிமிடத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும். மிகப் பிரமாதமான CUTS அவை. இசை இப்படத்திற்கு கூடுதல் எனர்ஜி. மொத்தத்தில் Paulo வின் படைப்புகளில் இது முக்கிய படமாகப் போற்றப்படும். நெட் பிளிக்ஸில் இப்படத்தை காணலாம் .... இவரது THE INVISBLE GUEST படம் ஹிந்தியில் டாப்சீ, அமிதாப் பச்சன் நடித்து BADLA என்று வெளியாகி வெற்றி கண்டது.

Comments