Spring, Summer, Winter, Fall, and Spring - 2003 korea

💘🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥💘 Spring, Summer, Winter, Fall, and Spring - 2003 korea பௌத்தமும் பௌத்தத்திற்கு எதிரான வடிவமும் “இரவும் பகலும் குளிர் காலமும் வசந்த காலமும் பசியும் திருப்தியும் சேர்ந்ததுதான் கடவுள்” கொரியாவின் பின்புலத்தில் ஒரு மலைபிரதேசத்தின் பள்ளத்தாக்கில் ஏரி போல புதைந்து கிடக்கும் இடத்தில் பௌத்த ஆலயம் இருக்கிறது. நீர்ப்பரப்பின் நடுவில் எப்பொழுதும் அசைந்து அல்லது மிதந்து கொண்டிருப்பது போன்ற ஆலயம். ஒரு முதிய பௌத்த துறவியும் ஓர் சிறுவயது பௌத்த துறவியும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என கதை துவங்குகிறது. நான்கு பருவக் காலத்தின் பின்னனிகளுடன் அதே இடத்தைப் படமாக்கியிருப்பது அசாத்திய கலை முயற்சி எனலாம். வெயில் காலம், மழைக்காலம், குளிர்க்காலம், இளவேனிற் காலம் என்கிற வெவ்வேறான சூழலில் ஒரே பௌத்த ஆலயமும் ஏரியும் அதே பௌத்த பிக்குகளுடன் காட்சிப்படுத்தியிருப்பது கொரிய சினிமாவான இப்படத்தை உலக தரத்திற்கு எடுத்துச் சென்றது என்றே கூறலாம். பின்காலணியத்துவ சமூகம் வளர்ச்சியடைந்த காலக்கட்டத்தில், கொரியா சினிமா தனக்கான அசலை அடையாளங்கண்டு, தனது நிலப்பரப்பில் கலாச்சார வெளியின் மூலம் சினிமா எல்லையை உலகப் பார்வைக்கு விரிவுப்படுத்திக் கொண்டது எனலாம். அதில் பல உலக தரத்திலான விருதுகளை வென்ற கி டுக் கிம் எனும் இயக்குனர் முக்கியமானவர். இவர் படங்களின் தாக்கத்தால் மலையாள பட உலகம் புதிய பரிமாணம் பெற்றிருக்கிறது. இவர் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் இது. “முதலில் மென்மையாகவும் மிதந்து செல்லும் தன்மை உடையவராகவும் மாறுங்கள். இயற்கையோடு போராடாதீர்கள். அதற்கு மாறாக, அதனுடன் கலந்து உறவாடுங்கள்” படம் முழுக்க பௌத்த துறவிகள் இருவரும் ஆசிரமத்தில் இருப்பதாகவும் ஆசிரமத்தை விட்டுப் படகில் பயணிப்பதாகவும், ஆசிரமத்தைச் சுற்றியுள்ள நீர்ப்பரப்பில் மிதக்கக்கூடிய தோற்றத்துடன் மலைப்பிரதேசங்கள் வெறிக்கும் உருவமாக நிலைத்திருப்பது ஜென் கோட்பாடுகளின் படிமங்களாகச் சொல்லப்பட்டுருக்கிறது ... “இறுக்கத்தையும் துன்பத்தையும் உண்டு பண்ணிக் கொண்டே இருக்க வேண்டாம்” மேற்குறிப்பிட்ட ஜென் சிந்தனை, மனிதன் தன்னுடன் சுமந்து திரியும் தன்னுடைய உலக வாழ்வியலை, தன்னால் செய்யப்பட்ட பாவங்களை, தனக்கான சிந்தனைகளை ஒரு கனமான கல்லைப் போல கட்டிக் கொண்டு அலைகிறான், அது அவனை வன்மையாக சோர்வடைய செய்கிறது, அவனைத் துவண்டு விடச் செய்கிறது என்பது போல, படத்தில் வரக்கூடிய பௌத்த துறவி சிறுவன் ஒரு மீனையும், தவளையையும், பாம்பையும் பிடித்து அதன் உடம்பில் கல்லைக் கட்டி நீரில் விடுகிறான். அதன் தத்தளிப்பையும் துன்பத்தையும் கண்டு மகிழ்கிறான். இவனுடைய செயலைப் பார்க்கும் அவனது குரு, அவனையும் கல்லால் கட்டி அவன் துன்பம் விளைவித்த உயிரினங்களை விடுவிக்கும்படி சொல்கிறார். அவனும் கல்லைத் தனது உடலில் சுமந்து கொண்டு அந்த உயிரினங்களைத் தேடி அலைகிறான். சுமத்தல், சுமந்து செல்லுதல் எவ்வளவு துன்பம் என உணர்கிறான். பிறகு மீனும் பாம்பும் இறந்து கிடப்பதைப் பார்த்துக் கதறி அழுவதோடு முதல் பருவக் காலம் முடிவடைகிறது. பிறகு அடுத்த பருவக் காலத்தில் அவன் இளைஞனாக வளர்ந்துவிடுகிறான். “இந்தப் பிரபஞ்ச முழுமையை எப்படிப் பார்க்கிறீர்களோ அப்படித்தான் உங்கள் வாழ்வும் அமையும். வெறுமனே, வெறுமையாக சூன்யமாக இருங்கள் என்று பௌத்தம் கூறுகிறது” ஆலயம், புத்தர் சிலை, குரு, பருவ காலத்தின் மாற்றங்கள் என மட்டுமே வாழும் அந்தப் பௌத்த துறவியின் உலகம் வெறுமையில் சூழ்ந்திருப்பதாகவும், இந்த மலைப்பிரதேசங்களையும், காட்டையும், ஏரியையும், அதன் முழுமையோடு தரிசிக்கும்போது, வெறுமையாக சூன்யமாக மட்டுமே உணர முடியும் என்பது போல, அவனின் உலகத்தில் ஒரு முழுமை இருக்கிறது, ஆனால் சொற்கள் இல்லை, பகிர்வுகள் இல்லை. ஆணைகள் படி எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறான். இங்கு யாரும் யாரையும் வெற்றிக் கொள்வது இல்லை. பிரபஞ்சத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியோடு சண்டையிட்டுக் கொள்ள முடியாது என்கிற பௌளத்த சாரத்திற்கேற்ப படத்தின் காட்சிகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் ஒரு பருவக் காலம் போல வெறுமனே கடந்து செல்கிறது. பனி வந்து மறையும் ஒரு தருணம் போல, ஆலயத்தின் வெளியைச் சுற்றியே நகர்கிறது எல்லாமும். புத்தர் தன் பரிசோதனையாக, மனித மனம் என்ற தன்மையில் மிக ஆழமாகச் சென்று பார்க்கும் பொழுது அங்கு ஒன்றுமே இல்லை, வெற்றிடமாக உள்ளது என்று சொன்னார். மிக மிக நுண்ணிய தன்மையில் பொருள் மறைந்து விடுகிறது. அங்கு வெறும் சக்திதான் நிலவுகிறது. சூன்யம் ஓர் அனுபவம் மட்டுமே, அதை விளக்க முடியாது, ஆகையால் அனுபவப்பூர்வமாக புத்தத்தை யாரும் வெல்ல முடியாது, ஆனால் உலகியல் தர்க்கம் சார்ந்து புத்த சிந்தனைகளை தோற்கடிக்க முடியும் அல்லது கேள்விக்குள்ளாக்க முடியும் என்ற பின்னனியில்தான் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பௌத்தமும் பௌத்தத்திற்கு எதிரான உலகியல் பிடிமானங்களும் சந்தித்துக் கொள்ளும் ஒரு மையப்புள்ளியாக இப்படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆசிரமத்திற்கு வைத்தியத்திற்காக வரக்கூடிய இளம்பெண்ணுடன் அந்த இளம் துறவிக்குக் காதல் ஏற்படுகிறது. முதன் முதலில் அவன் பார்க்கக்கூடிய பெண்ணாக அவள் அங்கு வந்து சேர்கிறாள். அவளுடன் சுற்றித் திரிகிறான், உடலுறவு கொள்கிறான், எதிலிருந்து அவன் விலகியிருந்தானோ அவையனைத்தும் அந்தப் பெண் மூலமாக அவனை வந்தடைகிறது. உலகியல் சுகத்துக்கங்களை ஒரு சுமையென சுமந்து கொள்ளத் துவங்கியதும், புத்தத்திற்கு எதிரான மனம் அவனுக்கு உருவாகிறது. தான் கண்டடைந்த சுகங்களின் மூலம் தான் இருப்பதாகவும், தன்னைப் பற்றி அதிகமாகவும், அந்தப் பெண்ணை ஆழமாகவும் காதலிக்க துவங்கும் கணங்களில் உலகியலுக்கும் புத்தத்திற்கும் மௌன போராட்டம் நிகழ்த்தப்படுகிறது. பிறகு ஆசிரமத்திலிருந்து வெளியேறி உலகியல் வாழ்விற்குச் சென்றுவிட்டு, ஒரு கொலையும் செய்துவிட்டு மீண்டும் ஒரு பருவக் காலத்தில் ஆசிரம் திரும்புகிறான். அந்தப் பெண் பௌத்தத்திற்கு எதிரான வடிவமாகவே வந்து, பிறகு படத்தின் இறுதியில் ஆசிரமத்தின் எதிரில் பனிகட்டி இடைவெளியில் சிக்கி இறந்தும் விடுகிறாள். இப்படியாகப் படம் ஒரு விரிவான தளத்தில் இயங்குகிறது. படத்தின் காட்சியமைப்புகளும், ஒளிப்பதிவும் பார்வையாளர்களுக்குப் புதிய பிரமாண்டமான அனுபவமாக இருக்கும். மேலும் எந்த அலட்டலும், மிகைத்தன்மைகளும், போலித்தனங்களும், ஆட்டமும் பாட்டமும், குத்தாட்டமும், மசாலாக்களும் இல்லாமல் மிக நேர்த்தியாக பௌளத்தத் துறவிகளின் வாழ்வையும், நிலப்பரப்பு சார்ந்த ஒவ்வொரு பருவக் காலங்களையும் அழகியலோடு காட்டியிருப்பது மாற்றுச் சினிமாக்கான வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது. அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூட்யூபில் இப்படத்தை காணலாம் ....https://youtu.be/gXyxi-jnKxw

Comments