MANJHI - The Mountain Man Hindi - 2015
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
🎥🎥🎥🎥🎥🎥🎥🎥
MANJHI - The Mountain Man
Hindi - 2015
பீகார் மாநிலத்தில் உண்மையில் வாழ்ந்த
‘தஷ்ரத் மஞ்சி’ என்ற மனிதரின் வாழ்வில் நிகழ்ந்த உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது இப்படம்.
உலகளவில் தன் படங்களின் மூலம் கவனம் பெற்ற, தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்ற இயக்குனர் கேத்தன் மேத்தா அவர்கள் இயக்கத்தில், நவாசுதீன் சித்திக், ராதிகா ஆப்தே ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.
பீகாரில் உள்ள ஒரு கிராமத்தில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் தஷ்ரத் மஞ்சி.
அவர் வாழும் அந்த கிராமம் வெளி உலகத்திலிருந்து ஒரு மலையால் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த மலைகளில் உள்ள கற்பாறையில் கால் இடறி, அவரது மனைவி தவறி விழுந்து விடுகிறார். அந்த மலையிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மனைவி இறந்து விடுகிறாள். அதன்பின் அவருடைய வாழ்க்கையே சூனியமாகிப் போகிறது.
அந்த பெரும் மலையின் மீது கோபம் கொண்ட மஞ்சி, ஒரு சுத்தி மற்றும் உளியைக் கொண்டு அதனை உடைத்து சாலை அமைக்க கிளம்புகிறார். இதனால், அந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவே பார்க்கிறார்கள். மலைப் பாறைகளின் மேல் அவருக்கு இருந்த வெறுப்பு மெல்ல மெல்ல மறைந்து அதனை நேசிக்கத் தொடங்குகிறார். தொடர்ந்து 22 ஆண்டுகள் ஒரு உளியும் சுத்தியலையும் கொண்டு மலையை உடைத்து சாலையை அமைக்கிறார்.
நவாசுதீன் சித்திக் தஷ்ரத் மஞ்சி’யாகவும், ராதிகா ஆப்தே அவரது மனைவி ஃபகுனியா’கவும் நடித்துள்ளனர்.
இருவரின் நேர்த்தியான நடிப்பால், படத்தினுடைய உணர்வுகள் எளிதாகவும், விரைவாகவும் பார்வையாளர்களுக்கு கடத்தப்படுகிறது.
படத்தின் மையமாக கையாள்வது காதலும், ஒரு மனிதனின் மன வலிமையும் தான் என்றாலும், அரசு அதிகார மையம், ஊழல், சாதிய ஆதிக்கம் மற்றும் மாவோயிச குழுக்களின் செயல்பாடுகளையும் கதையோட்டத்துடன் பதிவு செய்கிறது. அந்தக் கிராமத்தில் உள்ள ஆதிக்கச் சாதியினரின் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட தலித் சமூகத்து இளைஞர்கள் வன்முறை பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், படத்தின் நாயகனான மஞ்சி அதனை எதிர்ப்பது போலவும், வன்முறையை ஆதரிக்காததை போலவும் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
மஞ்சி வாழும் கிராமத்தில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. தன் காதல் மனைவி ஃபகுனியா இறப்பதற்குக் காரணமான அந்த பெரும் மலையை, அங்குள்ளவர்களின் நலன்களுக்காகவும் சாலையை அமைக்க அந்த மலையை உடைக்க வேண்டும் என மஞ்சி முடிவு செய்ய அதிக நேரம் எடுக்கவில்லை. தன் மனைவி இறந்த அடுத்த நொடியே அந்த மலைக்கு செல்கிறார். தன் சொந்த கிராம மக்களின் கேலி, கிண்டல்களையும் பொருட்படுத்தாமல் மலையை உடைத்துக்கொண்டே இருக்கிறார். மஞ்சியை கேலி செய்தவர்கள், சாதி ரீதியாக ஒடுக்கிய ஆதிக்கச்சாதியினர் என பலரும், மஞ்சியின் உழைப்பால் பின்னாட்களில் பயனடைகிறார்கள்.
‘நீங்கள் விரும்பினால் மலைகளைக் கூட நகர்த்தலாம்’ என்கிற பழமையான பழமொழி ஒன்று உள்ளது. இந்த பழமொழியை நிரூபித்துக் காட்டுகிறார் மஞ்சி. ஒரு தனிமனிதனாக தான் எடுத்த முடிவில் உறுதியாய் நிற்கிறார். சாலை அமைக்க அரசாங்கம் அவருக்கு தருவதாய் வாக்குறுதியளித்த பணத்திற்காக, டெல்லி வரை நடந்தே செல்கிறார், சாலைக்காக போராடுகிறார்.
மஞ்சியை பாம்பு கடிப்பது போன்ற காட்சி ஒன்று இதில் வருகிறது. அதற்கு அடுத்து அவர் தன் கால் கட்டை விரலை வெட்டும் ஒரு காட்சியும் உள்ளது. இந்த வாழ்வு, இந்த உடல் என அனைத்தும் ஒரு மனிதனுக்கு எப்போதும் நிச்சயமற்றவையாகவே உள்ளது என்பதை உணர்த்தும் விதமாக அந்தக் காட்சி உள்ளது. அந்த நேரத்தில் அவர் எதிர்கொள்ளும் வேதனை, உயிர் வாழ்வதற்கான ஒரு வேதனையாகப் படவில்லை, மாறாக தான் எடுத்துக்கொண்ட கடினமான வேலையை எப்படியாவது செய்து முடித்தாக வேண்டும் என்கிற உறுதியில் வெளிப்படும் வேதனையாகத்தான் தெரிகிறது. இந்த வலியையும், உணர்வையும் கடத்தியதில் நிச்சயம் நடிகர் நவாசுதீன் சித்திக்கிற்கு பெரும் பங்குண்டு.
மஞ்சி தான் சோர்வடையும் தருணங்களில் தன் காதல் மனைவியுடனான கடந்த கால நினைவலைகளை கண்முன் நிறுத்தி, தன்னை மேலும் உறுதிப்படுத்திக் கொள்கிறார். அவர்களின் காதல் வாழ்வு தனித்த ஒன்றல்ல, மாறாக அந்த மலைகளில் உள்ள ஒவ்வொரு பாறைகளிலும் உறைந்து கிடக்கிறது. அவையனைத்தும் அவர்களின் காதலையே நினைவூட்டுகிறது. அந்த காதலின் நினைவும், காதலியின் பிரிவும் தான், சாலை அமைக்க அவரை எந்த எல்லைக்கும் இட்டுச்செல்கிறது, அதில் வெற்றியடையவும் வைத்திருக்கிறது. இறுதியாக, அந்த காதல் அந்த பெரும் மலையைக் கூட பெயர்த்தெடுக்கும் ஆற்றலை கொடுத்திருக்கிறது.
மஞ்சி அந்த பெரும் மலையை உடைக்கத் தொடங்கிய 52 ஆண்டுகளுக்குப் பிறகு,
அவர் மலையை உடைத்து முடித்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு,
அவர் இறந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்திய அரசாங்கம் கடந்த 2011ஆம் ஆண்டு அந்த வழியில் சாலையை போட்டிருக்கிறது என்கிற தகவலோடு படம் நிறைவடைகிறது.
அவசியம் பார்க்க வேண்டிய இப்படத்தை நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப்பில் காணலாம் ...
https://youtu.be/I9KAoTQlEWs
Comments
Post a Comment