இன்று நான் சந்தித்தேன் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள்

ந. அருள் 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் மொழி பெயர்ப்புத் துறையின் இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.தற்போது தமிழ் வளர்ச்சித் துறையின் புதிய இயக்குநராக நியமித்து, தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ் வளர்ச்சித்துறை செயலர் மகேசன் காசிராசன் 2022 ஆம் ஆண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டார்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பணியிடத்திற்கும், மொழிபெயர்ப்பு இயக்குநர் பணியிடத்திற்கும் முழுக்கூடுதல் பொறுப்பும் இவருக்கு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. அருந்தமிழில் அயற்சொற்கள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் (M.Phil)பட்டம் பெற்ற இவர் புதுதில்லியிலுள்ள தில்லி பல்கலைக்கழகத்தின் இக்கால இந்திய மொழியியல் துறையின் வழியாக ஆங்கிலக் கவிஞர் சேக்சுப்பியரின் மொழிபெயர்ப்புகள், தழுவி எழுதிய படைப்புகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரி, தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகவும் புதுதில்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும், இவரது தமிழ்ப்புலமையால் ஈர்க்கப்பட்ட தமிழக முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களால் பணியமர்த்தப்பட்டு தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் துணை இயக்குநராகவும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறைச் செயலாளராகவும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இல்லாமல் தமிழ்நாடு அரசுத் துறைச் செயலாளராகவும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராகவும் பணியாற்றிய தமிழறிஞருமான முனைவர் ஔவை நடராசனின் மகன் ஆவார். இவருடைய பாட்டனார் ஔவை துரைசாமியும் புகழ் பெற்ற தமிழறிஞராகவும் உரையாசிரியராகவும் போற்றப்படுகிறார்.. ஒளவை அருள் அவர்களைச் சந்தித்து பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து அளவளாவிக் கொண்டிருந்தோம். என்னைப் பற்றி விசாரித்து நான் திரைப்படத்திற்கு எழுதிய பாடல்கள் பற்றியும் பாடலாசிரியர்களுக்குத் தனிச் சங்கம் இருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.சங்கம் சார்ந்து எந்த உதவிகள் வேண்டுமானாலும் செய்கிறேன் என வாக்களித்தார்.என் மானசீக ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் என்றதும் மகிழ்ச்சியில் திளைத்தார்.அவருக்கும் ஈரோட்டாருக்கும் உள்ள தொடர்பையெல்லாம் எடுத்துக்கூறி அவருக்கு மாணவனாய் இருப்பது உங்களுக்குக் கிடைத்த பெருமை என்றார்.எனக்கு தாய் பத்திரிக்கையின் ஆசிரியர் வலம்புரி ஜான் அவர்களைச் சந்திக்க கடிதம் கொடுத்ததை நெகிழ்ந்து எடுத்துக்கூறினேன்.இயக்குநர் அவர்களுக்கும் என் தந்தை,ஈரோடு தமிழன்பன்,வலம்புரியார் இன்னும் நமக்கு முன்னோர்களாய் இருந்தவர்களின் நடையைப் போல் இப்போது யாராலும் எழுத முடியாது ,எழுதுவதற்கும் ஆட்கள் இல்லை என வருத்தத்தோடு கூறினார்.பின்பு வார்த்தைச்சித்தர் வலம்புரி ஜான் அவர்களின் நடையைப் பற்றி,தாய் வார இதழில் பாடகர் ஜேசுதாசஸ் அவர்களின் குரல் வளம் பற்றி சொல்லுக? ஒரு வாசகர் கேள்வி கேட்கிறார்.அதற்கு நாம் என்ன சொல்வோம்,குரல் அருமை,சாகித்தியம் நன்றாக இருக்கிறது என எதையாவது சொல்லி வைப்போம். வார்த்தைச் சித்தர் சொல்லுகிறார் 'மாந்தளிரைக் குளிர்விக்கும் குளிர்காலக் கூவலைப்போல உள்ளது ஜேசுதாசின் குரல் வளம்.ஆலோலத் தென்றலிலே அசைகின்ற ஆலய மெழுகுவர்த்திகள் உருக்குகின்ற மௌன சங்கீதம் போல் உள்ளது என்கிறார். ஒரு நாள் வார்த்தைச் சித்தர் அவர்களைப் பார்த்தபோது, இந்தக் கேள்விக்கு இந்தப் பதில் நன்றாக இருக்கிறது என்றேன், நான் போகிற போக்கில் எழுதியது என்றார்.போகிற போக்கிலே இப்படி எழுதுகிறீர்களே உட்கார்ந்து எழுதினால் எவ்வளவு அருமையாக இருக்கும் என வியந்து சொன்னேன் என்றார்.என்னுடைய முதல் கவிதை நூலான அரைக்கம்பத்தில் நூலை வார்த்தைச்சித்தர் தான் வெளியிட்டார். 'முட்களுக்கிடையே நுழைந்து வந்தேன் மடி நிறைய மலர்கள் மனிதரிடையே பழகி வந்தேன் மனம் நிறைய முட்கள் ' எனும் என் கவிதையை மேடைகளில் மேற்கோள்காட்டிப் பேசியிருக்கிறார்.அதேபோல இளம்பாரி கருணாகரன் அவர்களும் அதே கவிதையை மேற்கோள் காட்டிப் பேசுவார் .நான் சொல்லுகிற வரை அது வார்த்தைச் சித்தரின் கவிதை என நினைத்திருந்தேன் இனி உன் பெயரைச் சொல்லிப் பேசுகிறேன் எனச் சொன்னார் .உடனே இயக்குநர் ஔவை அருள் அவர்கள் இலக்கியத்துறையில் பாரியாகச் செயல்படுகிறவர்கள் இருவர் ஒருவர் இளம்பாரி கருணாகரன்.அவர் இலவசமாக அரங்கம் அந்த விழா முடிந்ததும் உணவு கொடுத்து தமிழ் வளர்த்தவர்.இன்னொருவர் நல்லி குப்புசாமி என்றார்.இப்போதும் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழக வேந்தர் மாண்பமை பாரிவேந்தர், இன்னொருவர் மாம்பலம் சந்திரசேகர் என்றேன்.என்னோடு வந்த என் நண்பர் கவிஞர் கு.தென்னவன் அவர்களும் என்னுடைய முதல் நூலை உங்கள் தந்தை ஔவை நடராசன் அவர்கள் வெளியிட்டு என் நூலுக்குச் சிறப்புச் செய்தார்.அதே போல் கொடிகள் மட்டும் உயரத்திலே எனும் நூலை ஜி.கே.மூப்பனார் அவர்கள் வெளியிட வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் அவர்கள் வாழ்த்திப் பேசினார் என தன்னுடைய இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்தார்.இப்படி இலக்கியம் சார்ந்து மிகவும் எளிமையாகவும் அந்தப் பொறுப்பிலே இருக்கிறோம் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் அழகாகவும் அற்புதமாகவும் எங்களோடு உரையாடினார்.மிகுந்த மகிழ்வோடு பிரிய மனமில்லாமல் அவருடைய நேரம் கருதி விடைபெற்றோம்.

Comments