தெய்வக் குழந்தையைக் கண்டேன்

 






















நான் கடந்த சில நாட்களுக்கு முன்னால் மது கேசவ் பொற் கண்ணன் அவர்கள் எழுதிய எழுதிச் செல்லும்  இசையின் கைகள் பாடுகளம் என்னும் நூல் வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்துரை வழங்க அண்ணா பல்கலைக்கழகத்தின் அலுமினி கிளப் என்ற இடத்திலே  ஒரு மன்றத்தில் பங்கேற்றேன்.
     அந்த விழாவில் ஒவ்வொருவர் அந்த புத்தகத்தைப் பற்றி வாழ்த்துரையை  வழங்கிய பிறகு, ஒரு சிறந்த இசைக்குழுவைக் கொண்டு ஒவ்வொரு பாடலாக   ஒரு திரைப்பாடல்களை இசைத்துப் பாடினர்.
   அந்த இசை குழுவிலே பாடிய அத்தனை கலைஞர்களும் மிகச்சிறந்த பாடகர்களாக பாடகிகளாக திகழ்கின்றனர் என்பதை அவர்களது குரலிலும் சுதி மாறாமல் தாளக்கட்டு மாறாமல் எந்த இடத்திலே பாட வேண்டும் எந்த இடத்திலே பாடி முடிக்க வேண்டும் என்பதை எல்லாம் நன்கு உணர்ந்திருந்த ஒரு இசைக்குழுவாக அதைப் பார்த்தேன்.
        அதில் பாடிய ஒரு நண்பர் மிகவும் அருமையாக பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார் அவரது பாடலைக் கேட்ட பிறகு அந்த அரங்கமே அதிர்ந்து முடிகிறது. ஒவ்வொரு பாடல் முடிகிற போதும் பாராட்டு மழையில் நனைந்த அவர்  சங்கர் ராஜா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 
      நானும் சென்று நீங்கள் சிறப்பாக பாடினீர்கள் என்று பாராட்டும் விதமாக அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார் புகழ் பெற்ற பாடகர் தமிழிசை வாணர் திரு.டி.எல். மகாராஜன் அவர்களின் மகன் என்று சொன்னார்.
      உங்களுடைய எண்ணை கொடுங்கள் என்று கேட்டபோது அவர் என்னுடைய எண்ணை வாங்கி எனக்கு அழைப்பு கொடுத்ததும் அவருடைய பெயர் என்னுடைய கைப்பேசியிலே பதிவாகியிருந்ததை அதிர்ச்சியும் ஆச்சரியமாக பார்த்தேன்.
       ஏற்கனவே அவரோடு பழக்கம் இருந்திருக்கிறது நான் தான் பேசவில்லை என்ற குற்ற உணர்வு எனக்கு மேலோங்கியது.
        அந்தக் குழுவிலே இன்னொரு பையன் ஒரு 25 லிருந்து 28 வயதுக்குள் இருக்கிற ஒரு பையன் மிகவும் அழகாக செக்கச் செவேல் என பார்த்தவுடன் பிடிக்கிற ஒரு முக தோற்றத்தோடு  பாடிக்கொண்டு இருந்தான்.
     அவன் எங்கேயும் தவறவிடாமல் எங்கே தொடங்க வேண்டும் எங்கே முடிக்க வேண்டும் என்று அறிந்து வைத்திருக்கிறான். அவனது தாயார் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டும் ரசித்துக்கொண்டும் இருந்தார்.
     ஒரு ஐந்து பாடல் பாடியிருப்பான் என்று நினைக்கிறேன் அந்த ஐந்து பாடல்கள் முடிந்த பிறகு அவரது தாய் மேடையிலே அறிவித்தார் அவன் மன வளர்ச்சி குன்றிய மைந்தன் என்று.
       எல்லோருக்குமே அதிர்ச்சியாகவும்  ஆச்சரியமாகவும் இருந்தது சொன்ன பிறகு தான், அவனுடைய செய்கைகளை  உற்று நோக்கும் போது, மன வளர்ச்சி குன்றிய குழந்தையாக தான் தெரிகிறது .

    அது எப்படி தெரியவில்லை ஒரு பாட்டின் ஆரம்ப இசையைப் போட்ட பிறகு அழகாக அந்த இடத்திலே தொடங்குகிறான்,
     அந்தப் பாட்டுக்கேற்ற பாவனை அந்தப் பாட்டுக் கேற்ற குரல் வளம் அந்த பாட்டு கேற்ற எங்கேயும் தடம் மாறாத சிந்தனை ஒரு தவத்தை போல அற்புதமாக பாடுகிறான்.
        மனவளம் சிறந்த எத்தனையோ பாடகர்கள் மேடையிலே பாடிக் கொண்டிருக்கும் போது, அந்த பாடல் வரிகளை மறந்து விட்டு தனனா பாடிக் கொண்டு போவார்கள்,

        அல்லது தொடங்க வேண்டிய இடத்தை தவற விட்டுவிட்டு அந்த இடத்தில் இருக்கிற வரிகளைக் கொண்டு ஆரம்பிப்பார்கள்.
    சில பேர் தொடங்கிய இசையை நிறுத்திவிட்டு மறுபடியும் முதலில் இருந்து தொடங்கி எங்கே பாட வேண்டுமோ அங்கே பாடுவர்.
     அப்படி எத்தனையோ நிகழ்வுகளை என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்திருக்கிறேன். 

        ஆனால், மன வளர்ச்சி குன்றிய அந்த மைந்தன் மிகவும் அழகாக ஒரு பாட்டின் ஆரம்ப இசையைப்  போட்ட பிறகு, எங்கே பாட வேண்டுமோ அங்கே தொடங்குகிறான். எங்கே முடிக்க வேண்டுமோ அங்கே முடிக்கிறான்.          சரணம் எங்கே ஆரம்பிக்கும் என்று அவனுக்கு தெரிந்திருக்கிறது அந்த இசைக் கருவிகள் எல்லாம் ஒலித்த பிறகு சரணத்தை தொடங்குகிறான்.
     இசை தொடங்குகிறது மறுபடியும் அந்த இசை முடிகிற இடத்தில் இருந்து இரண்டாவது சரணத்தைத் தொடங்குகிறான். அழகாக பாடி அந்த இரண்டாவது சரணத்தையும்  சிறப்பான முறையில் பாடிமுடிக்கிறான், என்று சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்கள்.
   அப்படி ஒரு அழகு, அப்படி ஒரு உயரம், சிறந்த மனப்பாங்கு, எல்லோரையும் மதிக்கிற தன்மை.         அவர் தாய் , அவரை வணங்கு என்றால் உடனே கீழே விழுந்து வணங்குகிறான். 

        அப்படிப்பட்ட ஒரு பேரன்புமிக்க அவனுக்கு ஏன் மன வளர்ச்சி இல்லை  எனப் புரிந்து கொள்ள முடியவில்லை. 

       இந்த இயற்கை நமக்குப் புரியாததை பூமிக்குள் புதைத்து வைத்திருக்கிறது.

         சரியாக எதுவும் புலப்படவில்லையோ என நமக்கு தோன்றுகிறது.
     இடையிலே ஒரே ஒரு பாடல் பாடும் போது மட்டும் கொஞ்சம் சிரிக்க தொடங்கி விடுகிறான்.                    அவரது தாயார் அவருடைய தோள்பட்டையை லேசாக தட்டி ஒரு அமுக்கு அமுக்குகிறார்.

        உடனே அந்த இசைக் குழுவை நடத்துகிற ஒரு பாடகி ஓடிவந்து இடது தோள் பட்டையை லேசாக தட்டி அப்படியே ஒரு அழுத்து அழுத்துகிறார் உடனே அவன் சிரிப்பதை நிறுத்திவிட்டான். 

       அவன் சிரிக்கும் போதும் அந்தப் பாடலை இடைவிடாமல் பாடிக் கொண்டுதான் இருந்தான். 

      சிரிப்பு என்பது அந்தப் பாடலின் பாவனையைக் கெடுத்து விடும் என்பதால் அவர்கள் அதை செய்கிறார்கள் அப்படி செய்கிற போது அந்தப் பாடலை அவர் தொடர்ந்து பாடினார். 

      அவன் பாடி முடித்து விட்ட பிறகு அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நான் ஓடோடிச் சென்று, நீ அழகாக பாடுகிறாய் உன்னோடு நான் புகைப்படம் எடுத்துக் கொள்ளட்டுமா என்று நான் கேட்டபோது, 

          அவன் விழுந்து விழுந்து சிரித்தான். உடனே ஒரு குழந்தையைப் போல என்னுடைய தோளிலே அவனுடைய கையைப் போட்டு அப்படியே பின்பக்கம் சாய்ந்தும் முன்பக்கம் சாய்ந்தும் கீழே விழாத குறையாக,  நான் சொன்ன அந்த வார்த்தையை அனுபவித்து அனுபவித்து சிரித்தான்.

          பிறகு ,கூடவே இருந்து புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டான். அந்த புகைப்படத்தை எடுத்த என் நண்பர் கவிஞர் பழமொழிபாலன்,  நீங்களே அந்த குழந்தையைப் போல தான் சிரிக்கிறீர்கள் அவனோடு நீங்களும் சேர்ந்து ஒரு குழந்தையாகவே மாறிவிட்டீர்கள் எனச் சொன்னார்.

      நான் நம்பவில்லை.என் படத்தைப் பார்த்த பிறகுதான் அவர் சொன்னது உண்மை எனத் தோன்றியது. 

       அதை அவன் உணர்ந்து தான் உங்களோடு அவன் அப்படி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான் எனச் சொன்னார்.
     இவனுக்கு என்ன வயதாகிறது என்று அவனது தாயாரிடம் கேட்டேன். 28 வயது ஆனால் அவனுடைய மனத்தை அளவிடுகிற போது அவனுக்கு ஐந்து வயது என்று சொன்னார்.
     ஐந்து வயதிலேயே அற்புதமாக பாடுகிற ஒரு குழந்தையை ஒரு தெய்வக் குழந்தையாக அன்று நான் பார்த்தேன். அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது அந்த தம்பியோடு நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எல்லாம் என் ஆழ்மனதிலே அகலாமல் பதித்து வைத்திருக்கிறேன். 

Comments

  1. தமிழுக்கும் அமுதென்று பெயர். அந்த தமிழையும் அமுதத்தையும் தங்கள் திருநாமமாக வைத்திருக்கும் தாங்கள் மேலும் மேலும் சிறப்பாக சேவை செய்திட வாழ்த்துக்கள்.
    நட்புடன்-தனகோட்டி.

    ReplyDelete
  2. எழுத்துக்களின் வானம், இன்னமும் விரிவடைந்து கொண்டே செல்லட்டும். அதற்கு என் வணக்கங்களையும், வேண்டுதலையும், சமர்ப்பிக்கிறேன்.
    ராமகிருஷ்ணன்

    ReplyDelete

Post a Comment