கவி கா.மு. ஷெரீப் திரைப்பாடலாசிரியர்
,
கவி கா.மு. ஷெரீப் திரைப்பாடலாசிரியர்
பாட்டுக்கு மெட்டா? மெட்டுக்குப் பாட்டா? அல்லது துட்டுக்குப் பாட்டா? என இன்றைய காலத் திரைப்படப் பாடல்களும், காட்சிகளும் ""ரசிகர்களின் விருப்பத்திற் காக" எனக்கூறிக் எழுதுகிற கவிஞர்கள் நிறைய வலம் வருகின்ற திரையுலகத்தில், பாடல்களின் தரம், ''தடம்'" பிறழத் தொடங்கிய காலத்திலேயே "தமிழுக்கும் கவிதைக்கும்” பங்கம் ஏற்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாம்ல் "இனிமேல் திரைப்படங்களுக்குப் பாடல் எழுதுவதில்லை" என நாகரிகமாகவும், கண்ணியமாகவும் அறிவித்த மிகச்சிறந்த மனிதர்.
தன்மானம், தமிழ்மானத்துடன் தேசப் பற்று - கவிதை வாழ்வு - தனி மனித ஒழுக்கம் நேர்மை பிறழாத அரசியல் வாழ்வு இவை அனைத்தும் உள்ளடக்கித் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர்; கலைமாமணி கவி கா. மு. ஷெரீப்.
'சொர்க்கம்" என்பது தாயின் பாதங்களின் கீழ் உள்ளது என்னும் முகம்மது நபிகள் நாயகத்தின் போதனையைத் தன்னுடைய அருமையான பாடல் வரிகளாக அமைத்தவர்!
"அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை! - அவள்
அடி தொழ மறப்பவர் - மனிதரில்லை; மண்ணில் மனிதரில்லை.!" - என்கின்ற கவி கா. மு. ஷெரீப்பின் ஒரு பாடல் மட்டுமே போதுமானது.
திருவாரூர் அருகில் 1914-ஆம் ஆண்டு ஆகஸ்டு 11-ஆம் நாளில் பிறந்தவர் கா.மு. ஷெரீப். தனது பெற்றோருக்கு ஒரே ஆண் பிள்ளை என்பதால் மிகவும் செல்லமாகவே வளர்ந்தவர். 14-ஆவது வயதில் தனது தந்தையை இழந்து, தாயாரின் பராமரிப்பிலேயே தொடர்ந்து பொதக்குடி என்கிற ஊருக்கு இடம்பெயர்ந்து அரபிக்கல்வி பயின்றும், கல்வி நிலையம் செல்லாமலேயே ஆசிரியர் வீட்டுக்கு வந்து கற்றுத் தந்த தமிழ்ப்பாடங்களில் நன்கு பயிற்சி பெற்றவரான கவித்துவமான சிறுவன் கா. மு. ஷெரீப்புக்கு அவரது தாயார் முகம்மது பாத்து அம்மாள், தொன்மையான தமிழ் நூல்களையும், இலக்கிய நூல்களையும் வாங்கிக் கொடுத்து பக்குவப்படுத்தியுள்ளார். ஷெரீப் தன்னுடைய 15-ஆவது வயதிலேயே எழுத்துப் பணியில் இறங்கி, தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கப் பணிகளிலும் ஈடுபாடு கொள்கிறார்.
* 1934-ஆம் ஆண்டு தனது 20-ஆவது வயதில் திருமணம் முடிக்கிறார். ஆனால் சில காலங்களிலேயே மனைவி உடல்நலக் குறைவால் இறக்கிறார். எனினும், ஷெரீப்பின் எழுத்துப் பணியுடன் சுயமரியாதை இயக்கப் ணிகளையும் தொய்வின்றிப் பார்க்கிறார். 1940-இல் ஜமீலா பீவி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டு 9 ஆண் பிள்ளைகளும், 2 பெண் பிள்ளைகள் எனப் பெற்ற இவர், குடும்ப வாழ்வு - சுயமரியாதை இயக்கம் - தேசிய இயக்கம் பத்திரிக்கைத் துறை - இலக்கியம் - திரைப்படத்துறை - தமிழ் தேசியம் - தமிழ்நாடு எல்லைப் போராட்டம் - ஆன்மீக மார்க்கம் எனப் பன்முகத் தன்மையுடன் “உண்மையாக வாழ்ந்த ஓர் அற்புதமான மனிதர்.
இசுலாமியரான கவி கா.மு. ஷெரீப் சைவ உணவுப் பழக்கம் கொண்டவராகவே வாழ்ந்துள்ளார். இது மட்டுமல்ல; அவர் சென்னையில் வசித்த போது தனது நண்பராகிய பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவரது மகள்: பருவ வயது மோகத்தில் 'காதல்' என கயவன் ஒருவனிடம் ஏமாந்து கர்ப்பவதி ஆகி விட, குடும்ப மானம் கருதித் தற்கொலை, கர்ப்பம் கலைத்தல் எனக் குழப்ப நிலையில் இருந்தவரிடம், தகுந்த ஆறுதலும், அறிவுரையும் கூறியதுடன், "இறைவனால் உண்டாகிய உயிரை அழிக்கும் உரிமை மனிதருக்கு கிடையாது ! உமது மகள் எனது மகளாக குழந்தையைப் பெறட்டும்' - எனக்கூறி கர்ப்பவதியான பிராமணப் பெண்ணுடன் தனது மனைவியை அனுப்பி, அவர் வாழ்ந்த லெட்சுமாங்குடிக்கு அருகில் வேளுக்கடியில் தங்கி பேறுகாலம் வரையில் தங்கியிருந்து பெண் குழந்தை பிறக்கின்றது. பிறந்த பெண் குழந்தையை தானே தத்தெடுத்து, வளர்த்துத் திருமணம் வரை தனது 12-ஆவது குழந்தை என நட்புக்காக இவர் செய்த மனிதநேய உதவி மிகவும் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு.
ஒரு நாள், கா.மு. ஷெரீப் ஏற்பாடு செய்த சுயமரியாதை இயக்கப் பொதுக்கூட்டம் முடிவடைந்த நிலையில், நிதி வசூல் கணக்கு முடிக்கத் தாமதமாகிறது. நிதி விசயத்தில் சுறாராகவும், கண்டிப்பும் மிகுந்தவருமாகிய தந்தை பெரியார் அவ்விடத்தில், “எங்கேப்பா அந்த ராவுத்தர் பையன்?" எனக் கேட்டதைக் காதில் வாங்கிய கா.மு. ஷெரீப், தந்தை பெரியாரிடம் நேருக்கு நேர் வந்து, "சமுதாயத்தின் பேரைச் சொல்லி அழைப்பது தவறு” என்று அங்கேயே வாதிட்டும், பேசியபடி பணத்தை வழங்கியும் தந்தை பெரியாரை வருத்தம் தெரிவிக்கும்படியாக செய்துள்ளார்.
* 1942 காலத்தில் காங்கிரசு இயக்கம் நடத்திய “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைத்தண்டனை பெறுகிறார். பின்னாட்களில், சுதந்திர இந்தியாவில் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கான (பென்சன்) ஓய்வூதியம் பெற இவரிடம் “ஏன் நீங்கள் விண்ணப்பிக்கவில்லை" என நண்பர்கள் கேட்கும் வேளையில், “நான் பிறந்த மண்ணின் விடுதலைக்கு மானத்துடன் போராடினேனே தவிர வருமானத்திற்காக, சம்பளத்துக்காக எனது தேசபக்த உணர்வைப் பயன்படுத்த விருப்பமில்லை" எனத் தேசப் பற்றுடன் மட்டுமே வாழ்ந்த இந்திய “இசுலாமிய தேச பக்தர்" கா.மு.ஷெரீப்.!
சுயமரியாதை இயக்க ஏடுகள் “குடியரசு” மற்றும் “சந்திரோதயம்" போன்றவற்றில் எழுதி வந்த கவி கா.மு.ஷெரீப் “ஒளி" என்ற பத்திரிகையும் நடத்தியவர். கலைஞர் கருணாநிதி, கண்ணதாசன் போன்றவர்களின் எழுத்துத்திறனை அச்சிட்டு ஊக்கப்படுத்தியதுடன், கலைஞர் கருணாநிதி அவர்களை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் T.R. சுந்தரம் அவர்களிடம் அறிமுகப்படுத்தி, கதை, வசனகர்த்தா என உயர வைத்த பெருமையுண்டு. கலைஞர் மு. கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது ஷெரீபின் நண்பர்கள் குடியிருப்பு வீடு கேட்டு விண்ணப்பிக்க யோசனை சொன்னதற்கு கா.மு. ஷெரீப் "ஏக இறைவனிடம் மட்டுமே கையேந்துவேன், பிறரிடம் கையேந்துவது இல்லை!" - எனக்கூறி மறுத்துவிட்டவர், எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழக முதல்வர் ஆனபோதும் இதே, "குடியிருப்பு" யோசனையை நண்பர்கள் அறிவுறுத்தியதற்கும் “நான் ராமாவரம் போகாவரம் வாங்கி வந்தவன்" என்று மறுத்து விட்டார்.
கால ஓட்டத்தில் ம.பொ.சி.யின் தமிழரசுக் கட்சியில் சேர்ந்து "பொதுச் செயலாளர்" எனப் பொறுப்பேற்று, தமிழ்த் தேசியக் குரலாக ஒலித்து
தமிழக எல்லைப் போராட்டம் “தமிழ்நாடு” பெயர் வைக்கப்போராட்டம் என ம.பொ.சி.யுடன் சிறை சென்று வந்தவர். ம.பொ.சி. யுடன் கருத்து மாறுபாடு காரணமாகப் பின்பு பிரிந்துவிட்டார். தமிழரசுக் கட்சிப் பொறுப்பாளராக இருந்தபோது ம.பொ.சி.யின் 53-ஆவது பிறந்த நாளுக்கு 53 பவுன் தங்கச் சங்கிலி அணிவிக்க ஏற்பாடு செய்கிறார். பிரமுகர்கள் மூலம் 46 பவுனுக்கு வசூல் ஆகி உள்ள நிலையில் மீதமுள்ள 7 பவுனுக்காக தனது குடும்ப உடைமைகளை விற்று 53 பவுனுக்குத் தங்கச்சங்கிலி அணிவித்து விழா எடுக்கிறார். சிறிது காலத்தில் தங்கச்சங்கிலி ம.பொ.சி. பயணிக்க சொகுசுக்காரராக மாறி விடுகிறது. பின்னாட்களில் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிய கா.மு. ஷெரீப் அவர்களை ம.பொ.சி. “பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்ந்துவிட்டது" என விமர்சிக்க, அதற்கு கா.மு.ஷெரீப் “பட்ட மரத்திலும் இலைகள் இருக்காது ! இது இயல்பு" என பதிலடி கொடுத்ததும் அரசியல் அனுபவ பாடங்கள்!
சிறுகதைத் தொகுப்பு - நாடக நூல்கள் நவீன நூல்கள் இலக்கிய நூல்கள் என 25 நூல்களும், ஆன்மீக மார்க்க நூல்கள் 10 எனவும் 35 நூல்கள் படைத்த கவிமாமணி, கலைமாமணி கா.மு. ஷெரீப்பின் முத்திரைப்பாடல்கள்.
• ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா? • மாசிலா உண்மைக்
காதலே, மாறுமோ செல்வம் வந்த
சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா?
நான் பெற்ற செல்வம்.. நலமான செல்வம்
• பூவா மரமும் பூத்தது, பொன்னும் மணியும் விளைந்தது
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே! பணம் பந்தியிலே.. குணம் குப்பையிலே..
Comments
Post a Comment