கவிஞர் நா.முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

போதி ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் பாலுமகேந்திரா நூலகத்தில் 27/08/2023 மாலை 6 மணி அளவில் நடைபெற்ற நா.முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு கவிஞர் தமிழ்அமுதன் தலைமையில் நடைபெற்றது.விழாவில் வரவேற்புரையை அதன் நிறுவனர் கவிஞர் கவிஅமுதன் அவர்களும் ஜென் பற்றி வாசித்த அனுபவத்தை பாக்கியராஜ் அவர்களும் நிகழ்த்தினர்.பாடலாசிரியர் கவிஞர் பழமொழிபாலன் கவிஞர் நா.முத்துக்குமார் நினைவேந்தல் கவிதையை வாசித்தார்.பாடலாசிரியர்கள் கவிஞர் கற்பகம், கவிஞர் சண்முகராஜா, கவிஞர் ஆனந்தகிருக்ஷ்ணதாஸ், கவிஞர் நட்சத்திரன், கவிஞர் விசுவாமித்திரன், கவிஞர் குமரவேல் ஆகியோர் நினைவுகூர்ந்தனர்.விழாவின் சிறப்பு விருந்தினராக கவிஞர் தமிழ்ச்செல்வன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.நிறைவாக தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர் தலைவர் கவிஞர் தமிழ்அமுதன் தலைமையுரையாற்றினார்.

 













எல்லோருக்கும் வணக்கம்

இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்க கூடிய போதி ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர். திரு. எம். கவியமுதன் அவர்களே! ஒருங்கிணைப்பாளர். P. பாக்யராஜ் அவர்களே!

இந்த விழாவிற்கு தலைமை பொறுப்பேற்று இருக்கின்ற

தமிழே! 
அமுதே! 
தமிழ் அமுதே!

கவிதை வனம்
கண்டெடுத்த
கானகத்துவண்டே!

தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் 
மணமணக்கும் செண்டே!

ஒட்டுமொத்த கவிஞர்களுக்கும்
தஞ்சம் தரும் 
தமிழ் கூடே!

உதவி என்று இருகரம் நீட்டுகையில்
ஓடோடி வந்து 
இதயத்தையே கொடுக்கும் 
எங்கள் தலைவா!

எளிமையின் இலக்கணமே 
தலக்கனம் இல்லாத 
தமிழ்க் கனமே

பாடல் ஆசிரியர் சங்கம் அமைக்க வேண்டுமென்று 
காலையில் கண்ணதாசனும் வாலியும் போட்ட விதை 
மாலையே சூறைக்காற்று வந்து சூறையாடி விட்டு போக

அந்த விதை கண்டு 
நீரூற்றுகிறேன் என்ற பெயரில்
ஊணூற்றி உயிர் கொடுத்த 
எம் தலைவா!

கவிஞர்களின் கட்டுத்தறியே.
பாடலாசிரியர்களின்
பாட்டுக்கோட்டையே!

உன் தலைமையில் கவியரங்கம் என்பது 
எமக்கு கரும்பின் சுவையல்லவா?

எறும்பு கூட தீண்டாமல் 
எமக்குள் கிடந்த சொற்களை 
கரும்புச் சொற்கள் இவைதான் என்று 
கண்டெடுத்த தந்தது நீதானே!

திருவாரூர் தேருக்கு கூட 
ஆண்டுக்கு ஒருமுறைதானே தேரோட்டம்!

என் எழுத்துக்களை
”இனிய உதயம்” என்ற இதழில் 
மாதம் தோறும் 
தேர் பவனி வரச் செய்தது நீதானே!

நீ கவியரங்கத்தில் 
கரை கண்ட பாட்டரங்கம்!

நானோ சிற்றெறும்பு 
இன்னும் மொட்டு கூட அவிழாத 
சிறு அரும்பு!

நா முத்துக்குமாருக்கு 
நான் எழுதும் கவிதையில்
தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என 
கட்டுக்குலையாத தமிழை 
தொட்டு நான் எழுதுகையில் 
எதுகை, மோனை, தெவிட்டாத திணைமா
தொடை நயம் இல்லையெனில் 
புதியவன் இவனென்று பொறுத்தருள வேண்டுகிறேன்.




நா முத்துக்குமார் 

காஞ்சிபுரம் நெய்து தந்த 
கம்பன் வீட்டுத் தறியே!

கண்ணதாசனுக்கு பிறகு 
சினிமா பாடல்கள் கட்டவிழிந்து போய்விடுமோ 
என்று பரிதவித்த போது 
அதற்கு புத்தாடை கட்டி விட்டவன் நீ தானே!

நீ தொட்ட எழுத்தெல்லாம் 
தமிழ் மனம் கமழ்ந்ததே நண்பா!

நீ எழுதிய பாட்டெல்லாம்
தேனூறிக் கிடக்கிறதே நண்பா!

கிட்டத்தட்ட 16 ஆண்டு காலம் 
சினிமா உனக்கு கொடுத்த சிம்மாசனத்தில் 
நீ மட்டும்தானே ராஜபாட்டையாக வலம் வந்தாய்!

தமிழ் சினிமாவில்
உனக்கென்று தனிப்பாதை
போட்டுக் கொண்டவனல்லவா நீ!

நீ போட்டு வைத்த பாதையில்
இப்போதும் தேவகானங்கள்
இசைத்துக்கொண்டே இருக்கின்றதே நண்பா!

உன் பாடலை கேட்கும் போதெல்லாம் 
உள்ளம் இப்போதும் 
பூத்து பூத்து மணம் வீசுகிறதே நண்பா!

கவி ராஜனே!
நீ பாட்டு எழுத வந்ததிலிருந்து 
நீ மட்டும்தானே சினிமா எனும் கோட்டைக்குள்
ஒற்றை சிங்கமாகவே 
உருவெடுத்து நின்றாய்!



மரணிக்காதது உன் பாடல்! 
சிறுவனால் கூட
ஜீரணிக்க முடிந்தது உன் மொழி!

தமிழ் உனக்கு சொல்வனம் தந்தது 
நீயோ தமிழ் வற்றாமல் இருக்க 
கவிதை ஊற்றெடுத்து 
காவிரிக்கே மடைமாற்றம் செய்து வைத்தவனல்லவா நீ!

பாரதியும், பாரதிதாசனும் 
கம்பனும், கண்ணதாசனும் கவி வளர்த்த நிலத்தினிலே 
புதிது புதிதான கவிதை யுத்திகளை நட்டு வைத்து 
விதவிதமான கவிதையை ரகங்களை 
விளைவித்தவன் நீயல்லவா!

நீ மண்ணை விட்டு மறைந்தாலும் 
உன் கவிதைக்கும் பாட்டுக்கும் 
சாகா வரம் தந்துவிட்டு போன 
சரித்திர கவிஞனல்லவா நீ!

நிரந்தர கலைஞனே! 
எல்லோரும் வெயிலுக்காக நிழலில் ஒதுங்குவார்கள். 

நீயோ வெயிலோடு விளையாடி 
வெயிலோடு உறவாடி 
வெயிலோடு மல்லுக் கட்டி 
ஆட்டம் போட்டவனல்லவா நீ!

மகளுக்கும் தந்தைக்குமான 
ஆனந்த யாழை 
சுரம் பிரித்து காட்டியது நீதானே!

கோவில் எதற்கு
தெய்வங்கள் எதற்கு
ஒரு குழந்தையின் புன்னகை போதுமென்று 
பாசத்திற்கு புதிய யுத்தியை 
கண்டுபிடித்தது நீதானே நண்பா!



காதல் கவிதை எழுதுகிறவர்கள் 
கவிதை மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் 
அதை வாங்கிச் செல்லும் பாக்கியசாலிகள்தான் காதலிக்கிறார்கள் என்று
காதலுக்கான சூட்சம ரகசியத்தை சொல்லிக் கொடுத்தவன் நீதானே!

நீ விட்டுச் சென்ற கவிதை தளத்தில்தான்
பயணிக்க எத்தனிக்கிறது 
இன்றைய இளைய சமூகம்!

நீ நூறாண்டு காலம் வாழவில்லை 
ஆனால் உன் படைப்புகள் 
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் 
இந்த யுகம் உள்ளவரை 
காற்றுக்குள் இனிப்பை தடவிக் கொண்டிருக்குமே நண்பா!

நீ பாட்டு எழுத வந்த பின்புதான் 
நீ பற்ற வைத்த தமிழ்ப் பொறி 
திரை வனம் எங்கும் 
ஒற்றைச் சூரியனாய் ஒலி கொடுத்து நின்றது!

எல்லோரும் 
இலக்கணத்தின் முகடுகளில் சிக்கிக் கொண்டு கிடக்க 
நீ மட்டும் உளி இல்லாமலே சிற்பம் செய்யத் தெரிந்த 
வித்தை காரணல்லவா?

நீ சுஜாதாவின் முன்னிலையில் 
பாழுங் கிணற்றில் தூரெடுத்தபோதுதான்
இவன் தமிழ் சுரக்கும் ஊற்று என
அகிலமே அதிசயித்து போனதே நண்பா!

வாழிய உன் எழுத்து!
இன்னும்
வண்டுகள் மொய்க்கட்டும் உன் தமிழ்!






நன்றி
வணக்கம்.
பேரன்புடன்
முனைவர். அ. பழமொழிபாலன்
மயிலாப்பூர்.
9962465241


-----

பாட்டுப் பயணம்
-----------------------------
          கவிஞர் தமிழ்அமுதன் 

பாட்டு தான் 
பயணம் போகும்
இவ்ன்
பாட்டுக்காக பயணம் போனவன்

வீரநடை
பாடலிலே
திரையை முதலில் தொட்டவன்

காற்றின் மேனி
எங்கிலும் 
தமிழை நாளும் நட்டவன்

பாடல் கேட்கும்
மனதினை
திருடிக் செல்வதில் கெட்டவன்

வண்ணம் நிறைந்த
திரையிலே
பட்டாம் பூச்சி விற்றவன்

இளைய கவிகள்
கூட்டத்தில்
அவன் தான் கவிதைக் கொற்றவன்

மறைந்துபோன
கருவியாம்
ஆனந்த யாழை மீட்டினான்

தேசிய விருது 
பெற்றுத்தான்
அவனை யாரெனக் காட்டினான்

தாடி வைத்து 
வார்த்தையில்
மோடி வித்தை செய்தவன்

ஆசை தீர 
மதுவருந்தி
அனைவரையும் கொய்தவன்

திசைகள் எங்கும்
பாடலால்
தமிழை பரவச் செய்தவன்

காஞ்சியிலே
பிறந்து வந்து
புதிய தமிழை செய்தவன்

கடலைக் குடித்து
மேகமாக
துளித் துளியாய் பெய்தவன்

மௌனங்களை
விற்று அவன்
வார்த்தைகளை வாங்கினான்

அமைதியாக
சாதித்தவன்
தமிழின் மடியில் தூங்கினான்

மெட்டுக்காக
வார்த்தைத் தேடி
ஓடிச் சென்னறதில்லையே

அவர் மெட்டுக்காக
ஓடி வந்து
வார்த்தை வந்து நிற்குமே 

தூர் எனும்
கவிதையால்
தமிழின் தூரை எடுத்தவன்

தமிழுக்காக
வாழ்ந்து அவன்
தனது உயிரைக் கொடுத்தவன்

----

கவிஞர்.
*நா.முத்துகுமாா்*
அவர்களுக்கு ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி

தமிழ் தாய் பெற்ற
கவிமகன்.
பேனா விரல் பிடித்து
நடந்தவன்.

முதன்முதலில்
வீரநடை போட்டு
கஸ்தூாி மான் குட்டியாக.
துள்ளி குதித்தவன்.

உாித்த நேரத்தில்
உதித்ததை எழுதினாலும்.
நம் மனதை உருக
எழுதுபவன்..

மௌனத்தில்
சித்தன் இவன்..
ஞானத்தில் 
புத்தன் இவன்..

புத்தக புழு இவன்
புத்தியில் கத்தி இவன்..

இலக்கண இலக்கியத்தில்
இலக்கை அடைந்தவன்..

பாட்டோடு விளையாடி
பாட்டோடு உறவாடி
பாட்டோடு மல்லுகட்டி
ஆட்டம் போட்டவன்
நமையெல்லாம்
ஆட்டி படைத்தவன்..

கவி ராட்சசன் இவன்
பழகினால் 
பழரசம் இவன்..

வாிகளில் காதல்
வலியை குறைத்தவன்..
சற்று_
காதல் வலியையும்
கொடுத்தவன்..


துட்டு சேர்க்காதவன்
ஆயிரம் மெட்டுகள் சேர்த்தவன்..

ஆனந்த யாழை 
மீட்டி விட்டு.. இன்று
ஆகாயத்தில்
உறங்குகிறான்..

இவன்_
படைத்த படைப்பால் வாழுகிறான்..
✒️

*என்.சண்முகராஜா*
பாடலாசிாியர்



Comments