பாடலாசிரியர்கள் சந்திப்பு -சிவசங்கர்

 



தமிழ் திரைத்துறையில் பாதிக்கு மேல் பங்கு வைப்பது தமிழ் இசைத்துறை. அந்த தமிழ் இசைத்துறை ஒளி என்றால் அதன் ஜீவன் தமிழ்ப்பாடலாசிரியர்கள்.


கவிதை எழுதுவது ஒரு புறம் என்றாலும் பாடல் எழுதுவது என்பது முற்றிலும் வேறு. ஒரு பாடலுக்கு ஒரு இசையமைப்பாளர் மெட்டு அமைக்க வேண்டும். அந்த மெட்டுக்கேற்ற வரிகளை ஒரு பாடல் ஆசிரியர் எழுத வேண்டும். ஒலிச் சந்ததுக்குள் அடைப்பட்ட ஒழுங்குச் சத்தமே பாடல். அப்படிப்பட்ட பாடல்கள் காலம் காலமாக மக்களின் அன்றாட வாழ்வில் கரைந்த ஒரு விஷயம், கலந்த ஒரு விஷயம். துக்கம், சந்தோஷம், அழுகை, ஆற்றாமை, ஆறுதல், தேடுதல் என அனைத்திற்கும் பாடலை கொடுத்தும் நாடியும் வந்த நீண்டதொரு மரபு தமிழ் மரபு.


இன்றும் உயர்ந்த கட்டிடங்கள் முதல் உழைக்கும் மக்கள் வரை பலரும் பாடல்களை கேட்டுக்கொண்டு தங்கள் பணிகளை ரிலாக்ஸாக செய்வதும், இரவு வேளைகளில் பாடலுடன் பயணம் செய்வதும் தவிர்க்க முடியாதது. அப்படிப்பட்ட பாடல்களை தொடர்ச்சியாக எழுதக்கூடிய தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்கள் வரலாறு தமிழில் நீண்ட நெடும் வரலாறாக இருக்கிறது.‌


கம்பர், பாரதியார், பாரதிதாசன், காளிதாஸர் , பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், உடுமலை நாராயண கவி, மதுரகவி பாஸ்கரதாஸ், தஞ்சை ராமையா தாஸ் எனத் தொடங்கி கண்ணதாசன், மு.மேத்தா, முத்துலிங்கம், புலமைப்பித்தன், குருவிக்கரம்பை சண்முகம், பிறைசூடன், வாலி, வைரமுத்து, வாசன், வல்லபன், பஞ்சு அருணாசலம், இளையராஜா, கங்கை அமரன், காமக்கோடியான், அறிவுமதி கலைக்குமார், பழநிபாரதி, தாமரை, அண்ணாமலை, பா.விஜய், யுகபாரதி, சினேகன், முத்து விஜயன், விவேகா, நா.முத்துக்குமார், கபிலன், பிரியன், கார்க்கி, முத்தமிழ் , அருண்ராஜா காமராஜ், விவேக், கார்த்திக் நேத்தா, ஞானகரவேல், தவக்குமார்………… என நீண்டதொரு பட்டியல் தமிழ் சினிமாவின் பாடல்களை காற்றின் தீரா பக்கங்களில் எழுதியுள்ளது. இவை தவிர ஆர்.வி. உதயகுமார், பேரரசு, பாக்யரஜ், டி.ராஜேந்தர் போன்ற பல இயக்குநர்களும், தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுமே பாடல்களை எழுதியுள்ளனர்.


தற்போதும் கற்பனைகள் முற்றும் நற்பாடல்களுக்கு பஞ்சமில்லை என்பதாக சமகால பாடலாசிரியர்கள் சளைக்காமல் பாடல்களை எழுதி வருகின்றனர். ‌ அவர்களில் பலரும்தான் தற்போது பாடலாசிரியர் சந்திப்பு நிகழ்வு ஒன்றில் தற்போது பங்கேற்றுள்ளனர். தமிழ்த் பாடலாசிரியர்களின் குறைந்தபட்ச ஊதியம் தொடங்கி, அவர்களுக்குண்டான முறையான அங்கீகாரம், உழைப்பு சுரண்டலுக்கு எதிரான உரிமை கருத்துக்கள் உள்ளிட்டவற்றை இந்த சந்திப்பில் விவாதித்துடன் தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கும் பாடலாசிரியர்களுக்கு எழக்கூடிய பிரச்சனைகளை சங்கம் தலையிட்டு தீர்ப்பது தொடர்பான வலுவான முடிவுகளையும் எடுத்துள்ளதாக தெரிகிறது.


தமிழ்த்திரையுலகின் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு சங்கம் இருக்கிறது. அந்த சங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் வலுவான விதிமுறைகள் இருக்கின்றன. அப்படித்தான் பாடலாசிரியர்களுக்கான விதிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்து ஒருமித்த கருத்துடன் நிறைவடைந்த இந்த நிகழ்வில் நீண்ட நாள் கழித்து அனைவரும் சந்தித்து சங்கமித்துக் கொண்டனர்.‌



கவிஞர்கள் உமாதேவி, மதுரா, கதிர் மொழி, நிலா, பத்மஜா, தமிழமுதன், மனோபன், ஏகாதேசி, சீர்காழி சிற்பி, சாரதி, முருகன் மந்திரம், மோகன் ராஜன், அருண் பாரதி, அ.ப.இராசா, மணி அமுதவன், மகுவி, அஸ்மின், தரன், கு.கார்த்திக், லாவரதன், நிரஞ்சன், இனியவன், விக்னேஷ் ராமகிருஷ்ணன், வினோதன், சிவசங்கர், பிரேம்சந்த், பால வேலாயுதம் உள்ளிட்ட பாடலாசிரியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


-சிவசங்கர்




Comments