நீர் மத்தாப்பு மதிப்புரை
கவிஞர்.தமிழமுதன் எழுதிய
நீர் மத்தாப்பு
ஹைக்கூ தொகுப்பு
மதிப்புரை
கவிஞர்.அ.இசை
**************************
ஹைக்கூ என்னும் கவி வடிவத்தில் கவிதை எழுதவே முதலில் ஒரு தனி மனம் வேண்டும். காரணம் கவிதைகளே காலாவதியாகிவிட்டது என்ற முரண்பாட்டுக் கூச்சலுக்கு முண்டாசு கட்டவே நிறைய படைப்பாளிகள் போராடுகின்றனர்.
இச்சூழலில் கவிஞர் தமிழமுதன் ஹைக்கூ வடமிழுக்க முனைந்திருப்பது அவர் தமிழ் மொழிக்கு ஆபரணங்களைப் போட்டு அழகு பார்க்க நினைக்கிறார்.
உட்கார்ந்து இடத்திலேயே ஊர்ந்து போகும் எறும்பைப் பார்த்து நிறைய ஹைக்கூ நட்சத்திரங்களை "நீர் மத்தாப்பு"-வில் தெறிக்க விட்டிருக்கிறார்.
"ஊர்ந்து போகிற எறும்பே!
எந்த ஊருக்குப் போகிற விரைந்தே!!
சார்ந்து வாழுற மனித இனத்தை
சாதனை படைக்க தூண்டும் மருந்தே!",
என்று தமிழ்ச்செல்வன் எழுதிய கவிதை வரிகளை ஞாபகப்படுத்தும் தமிழமுதன்
"எண்ணெயில் நனைந்த தாள்
மின்னுவதெல்லாம் விளக்கல்ல
சிறகுள்ள எறும்புகள்",
என்று எறும்புகளை மனிதாபிமானத்தோடு அணுகுகிறார்.....
திரைப்படப் பாடலாசிரியராக இருந்து கொண்டு இலக்கிய பங்களிப்பையும் செய்து கொண்டிருக்கிற தமிழமுதனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவர் படைத்துள்ள ஹைக்கூ மின்மினிக் கவிதைகளா? மின்னலா? என கேட்கத் தூண்டுகிறது.
"ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் ;வாடி இருக்குமாம் கொக்கு", என்ற மூதுரை வரிகளை ஞாபகப்படுத்துகிற விதமாக
" இலையுதிர் காலத்தில்
மரத்தில் பூக்கள்
கொக்குகள்",
என்று அருமையான கொக்குவைப் படிக்கும்போது ஹைக்கூவை ஹொக்கு எனவும் அழைப்பார்கள். கொக்கு எனும் ஹொக்கூவே நினைவுக்கு வருகிறது. . தேனீக்கள் நகரத்தில் கூடு கட்டக் கூட இடமின்றி தவிக்கிறது; அந்தத் தவிப்பினை தேனியாகவே தமிழ்அமுதன் மாறி
"மரங்களற்ற நெரிசல் நகரம்
கட்டிட உச்சியில்
தேன்கூடு",
என அழகாக ஹைக்கூ தந்துள்ளார்.
ஒதுங்க குடிசை கூட இல்லாத சாமானியனுக்குப் பிறந்த குழந்தை நண்பகலில் அது உறங்கும் இடத்தை ஏழ்மை நிலையை எடுத்துச் சொல்லும் எடுப்பான ஹைக்கூ
"சுடுபகல்
குழந்தை படுத்திருந்தது
சிலை நிழலில்",
என படம் பிடித்துக் காட்டுகிறார்.
அதுபோல நூலாசிரியர் தமிழ்அமுதன் தான் கவிஞர் மட்டுமல்ல ஓவியரும் கூட என்பதனை சொல்வதுடன் நில்லாமல் நான் பூ வரைந்தால் வண்ணத்துப்பூச்சி வந்து அமரும் ....அப்படி தத்ரூபமாக இருக்கும் என்று தன்னைத்தானே மெச்சும் வகையில்
"நான் வரைந்த
பூவின் மேல்
வண்ணத்துப்பூச்சி",
என்று பெருமிதம் கொள்கிறார்.
இப்படி எறும்பு, எலி, கொக்கு, புழு, மீன், சிலந்தி, தும்பி, மயில், காக்கை, தவளை, கிளி, மரம், மாடு, குயில், குருவி, குழந்தை, நாய், அணில், தொழிலாளி என்று ஹைக்கூவின் பாடுபொருளுக்கு நாயர்களாக தமிழமுதன் எடுத்து எழுதியுள்ள விதம் திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டுகிறது. மீண்டும் ஒருமுறை படிக்கிற போது,வேறு கோணத்தில் புதிய பார்வையோடு நம்மை புத்துலகுக்கு அனுப்புகிறது 'நீர் மத்தாப்பு' நெருப்பில் மத்தாப்பு பார்த்திருக்கிறோம்.அதென்ன நீர் மத்தாப்பு எனச் சிந்திக்கும்போது வந்து நிற்கிறது இந்தக் கவிதை
தேங்கிய குட்டையில்
குளிக்கிறது காக்கை
நீர்மத்தாப்பு
என எழுதுகிறார்.
கவிதையைப் படிக்கும்போதே காட்சி வந்து கண் முன்னே நிற்கிறது.காக்கை குளித்துவிட்டு உடம்பை ஒரு சிலுப்பு சிலுப்ப சிறகில் ஒட்டியிருக்கும் நீர் துளிகளாய்த் தெறிக்கும் அழகை நீர் மத்தாப்பு என்கிறார்.என்ன கற்பனை வளம் படிக்க படிக்க உள்ளுக்குள் ஒரு தேன் சுரக்கும் இன்பம் .தீபாவளி இல்லாத காலத்திலும் நம் மனதில் மத்தாப்பு மின்னுகிறது.
பிடித்தமான கவிதைகள் இருக்கின்றன.எல்லோரையும் பிடித்துவைக்கிற கவிதைகளும் இருக்கின்றன.
கவிஞர் தமிழமுதனின் ஹைக்கூ கவிதைகளும், ஓவியர் மாரிஆனந்தின் ஓவியமும் நூலெங்கும் கைகோர்த்து கவிநடனம் பூரிகின்றன அழகு ததும்ப .
நீர் மத்தாப்பு என்று நூலின் தலைப்பைப்
படிக்கிற வாசகர்களே தன்னை மத்தாப்புவாக கற்பனை செய்து கொள்ளும் வகையில் சுட்டுவிரல் நம் பக்கம் நீளுகிறது. தமிழமுதன் இந்தப் படைப்பில் களைப்பின்றி வாசிக்க, ஒரே வாசிப்பில் அனைத்து கவிதைகளையுமே வாசிக்கின்ற இலகுவான வரிகளில் ஜிஎஸ்டி வரி இல்லாமல் தந்திருக்கிறார். ஹைக்கூ வாழ்க
Comments
Post a Comment